இந்திய அரசியலைப்பு சட்டம் என்னும் மகத்தான சாசனத்தை வடிவமைத்த மாபெரும் சிற்பியும், சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க பாடுபட்ட சமத்துவ நாயகருமான சட்டமேதை ‘பாரதரத்னா’ பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் 125-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஐ.நா.சபை தீர்மானித்துள்ளது.
சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாள் விழா வரும் 14-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் இதுதொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கான நிரந்தரப் பிரதிநிதியான சையத் அக்பருதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகமெங்கிலும் வாழும் கோடிக்கணக்கான இந்திய மக்களின் தேசிய அடையாளமாகவும், சமதர்மம் மற்றும் சமூகநீதியை விரும்பும் மக்களின் நாயகராகவும் விளங்கும் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய அமைப்பு, கல்பனா சரோஜ் அமைப்பு மற்றும் மனிதவள அமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து ஐ.நா.சபையில் வெகு சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றில் முதல்முறையாக பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்தநாள் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் வரும் 13-ம் தேதி கொண்டாடப்படும். அன்றைய தினம் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி நிரந்தரமான முன்னேற்ற இலக்கை நோக்கி செல்வது தொடர்பான அவரது தொலைநோக்கு பார்வை தொடர்பான கருத்தரங்கமும் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அறிவோம்: அம்பேத்கர் அவர்களின் வரலாறு
பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar MA., Ph.D., M.Sc., D.Sc., Barrister-at-Law, L.L.D., D.Litt ; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். ‘திராவிட புத்தம்’ என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர் எனப்பட்ட தலித் மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது.
சமூகப்பணிகள்
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே நேரத்தில், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். 1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், ‘என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார். இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் ‘இரட்டை வாக்குரிமை” தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. மகாத்மா காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்படக் கூடாது என வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக செப்டம்பர் 24 – 1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே ‘பூனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார்.
இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். அவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது ,அதன் ஒரு பகுதியான ‘இந்து சட்டத் தொகுப்பு மசோதா’விற்கு பாராளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.( 1952 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னான காங்கிரஸ் அதிக இடங்கள் பெற்றமையினால் 1952 ல் அந்த சட்டம் நிறைவேறியது) அம்பேத்கர் உருவாக்கிய இந்து மதச் சீர்திருத்தச் சட்டத்தின் பெரும் பகுதியை அவரது வாழ்நாளுக்குள்ளாகவே கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி அம்பேத்கரின் கனவை நனவாக்கினார் நேரு. அம்பேத்கர்தான் அந்தச் சீர்திருத்தத்தின் தலைமகன் என்பதையும் நேரு மறக்காமல் குறிப்பிட்டார். சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் 1956 – டிசம்பர் 6-ல் காலமானார்.
ரிசர்வ் வங்கி உருவாக்கத்தில் பங்கு
அம்பேத்கர் 1921ம் ஆண்டு வரை தொழில்முறை பொருளாதார அறிஞராக பணியாற்றிய பொழுது பொருளாதாரம் குறித்து 3 துறைசார் புத்தகங்களை எழுதியிருந்தார்.
கிழக்கிந்திய கம்பெனியின் நிருவாகமும் நிதியும் (Administration and Finance of the East India Company).
பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களின் நிதியின் பரிணாமம் (The Evolution of Provincial Finance in British India)
ருபாயின் சிக்கல்கள் : மூலமும் தீர்வும்
கில்டன் யங் ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் 1934ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது
டாக்டர் அம்பேத்கர்: எல்லோருக்குமான தலைவர்
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் அவர். வாழ்நாளுக்குப் பிறகும், ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாள மாக மாறி, இன்னும் போராட்டம் நிகழ்த்திக்கொண்டிருப்பவர் அம்பேத்கர். இதனால்தான், அந்த மக்களின் ஈடிணையற்ற தலைவராக அவர் இருக்கிறார். அதே காரணத்துக்காகத்தான் அவர் எல்லோருக்குமான தலைவராகிறார். கருப்பின மக்களுக்காகப் போராடினாலும் நெல்சன் மண்டேலாவை எல்லா மக்களும் தங்களுக்கான தலைவராக ஏற்றுக்கொள்வது எதனால்? சமூகத்தின் ஏற்றத்தாழ்வை அகற்றுவதற்கும் சமத்துவத்தை நிறுவுவதற்கும் எந்த மனிதர் பாடுபடுகிறாரோ அந்த மனிதரே உலகம் முழுமைக்குமான தலைவராகிறார்.
ஏனெனில், சமூகநீதியின் திசை நோக்கி ஒரு சமூகத்தை அவர் விழிக்க வைப்பதே அந்தச் சமூகத்தைப் பல மடங்கு மேம்படுத்துகிறது. சமத்துவத்தையும் சமூகநீதியையும் நோக்கி நம் சமூகம் சில அடிகளையாவது எடுத்துவைத்திருக்கிறது என்றால், அதற்கு அம்பேத்கரும் முக்கியமான காரணமல்லவா! இதற்காகவே, அம்பேத்கருக்கு நாம் காலமெல்லாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
அம்பேத்கர் நம் எல்லோருக்குமான தலைவர். நாம் அனைவரும் இதை உணரும் காலத்தில்தான் சமூகநீதியின் உச்சத்தில் நாம் இருப்போம்!