பட்டுக்கோட்டை அருகேயுள்ள மனோரா எனும் சுற்றுலாத்தளம் மற்றும் பட்டுக்கோட்டை அருகே உள்ள கடற்கரையில் அமைந்துள்ள அலையாத்தி காடுகள் இப்பகுதி மக்களுக்கு சுற்றுலாத்தளமாக அமைந்துள்ளது
மனோரா (The Manora Fort)
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா. சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லக்கூடிய கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் அமைந்துள்ளது. மாவீரன் நெப்போலியனுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடந்த போரில் ஆங்கிலேயர்கள் பெற்ற வெற்றியின் நினைவாக தஞ்சை மன்னன் சரபோஜி கி.பி.1814ல் கட்டிய நினைவுச் சின்னம் இது. 8 அடுக்குகளுடன் 75 அடி உயரமுள்ள கோபுரம். அறுங்கோண அமைப்புடையது. கோட்டை போல் காணப்படும் மனோரா கோபுரத்தை சுற்றி மதிலும், அகழியும் காணப்படுகிறது. மராட்டிய கால கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இங்கு சிறுவர் விளையாட்டு பூங்கா, கடலில் படகு சவாரி, கலங்கரை விளக்கம் போன்றவை பிரசித்தமானது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமேஸ்வரம், கன்னியாகுமரி செல்பவர்கள் இங்கு வந்து சுற்றி பார்க்கிறார்கள். ஆடி அமாவாசை, ஆடி 18ம் பெருக்கு தினங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு குவிகிறார்கள்.
போக்குவரத்து வசதி
திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வழியாக பட்டுக்கோட்டை வந்து அங்கிருந்து அதிராம்பட்டினம் வழியாக மனோரா செல்லலாம். பேராவூரணியில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் கிழக்கேயும், பட்டுக்கோட்டையில் இருந்து 22 கி.மீ. தூரத்தில் தென்கிழக்கே கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகள், கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் பஸ்களில் வரலாம்.
Leave a Comment