Thanjavur Government Doctor helped poor people in lockdown period:
பட்டுக்கோட்டை அருகே கொரோனா ஊரடங்கால் வருமானம் இழந்து, உணவுக்கு வழியில்லாமல் தவித்து வந்த 70 நபர்களுக்கு சமூக ஆர்வலர் உதவியுடன் உணவு வழங்கி வருகிறார் அரசு மருத்துவர் ஒருவர்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியில் பூம்பூம் மாடு தொழில் செய்து வந்த 15 குடும்பங்களைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் இருக்க இடமின்றி லாரிகளுக்கு கீழ்பகுதியிலும், டெண்ட் அடித்தும் வசித்து வந்துள்ளனர். திடீரென விதிக்கப்பட்ட ஊரடங்கால் இந்தக் குடும்பங்கள் நிலைகுலைந்து போனதுடன் ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் தவித்து வந்துள்ளனர்.
பசி பட்டினியோடு குழந்தைகளும் இருந்ததும்தான் பெரும் கொடுமை. இதை அறிந்த சமூக ஆர்வலரான சதா.சிவக்குமார் என்பவர் அவர்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் நிலைகண்டு மனம் வருந்தினார். இதுகுறித்து தஞ்சாவூரைச் சேர்ந்த அரசு மருத்துவரான டாக்டர் அரவிந்த் தங்கராஜ் என்பவரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.
இதை கேட்ட டாக்டர், அந்த மக்களின் துயரை உடனே துடைக்க வேண்டும் எனக் கூறியதுடன் தினமும் மூன்று நேரமும் அவர்களுக்கு நல்ல சுகாதாரமான உணவு கிடைக்க வேண்டும், அதற்கு வேண்டியதைச் செய்து தருகிறேன். நீங்கள் களத்திலிருந்து அவர்களைக் கலங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து, அந்த மக்களின் பசி போக்குவதற்கான பணிகள் தொடங்கியதுடன் அவர்களுக்கு சாப்பாடு கொடுக்கப்பட்டு வருகிறது.
சதா.சிவக்குமாரிடம் பேசினோம். இங்கு இரண்டு தலைமுறைகளாக பூம்பூம் மாடு தொழில் செய்யும் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லாததால் சாலையோரத்திலேயே டெண்ட் அடித்துத் தங்கியுள்ளனர். ஆதார், ரேஷன் கார்டு போன்ற அரசு ஆவணங்கள் எதுவும் இவர்களிடத்தில் இல்லை. அதைக் கொடுப்பதற்கு அரசும் முயற்சி செய்யவில்லை.
இந்த நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கூலித் தொழிலாளர்கள், அன்றாடம் கூலி வேலைக்குச் சென்றால்தான் வீட்டில் அடுப்பெரியும் என்கிற நிலையில் இருக்கிற பல குடும்பங்களைப் பெரிதும் பாதித்துள்ளது. இதேபோல் பூம்பூம் மாடு தொழில் செய்து வந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
உணவில்லாமல் தவிக்கும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு உணவு கொடுக்குமாறு அரசிடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. ஏழை எளிய மக்களுக்கு உணவு கொடுக்க எந்த உத்தரவும் வரவில்லை என்றனர். ஆனாலும், கண்ணெதிரே சக மனிதன் பாதிக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. அதனால் எங்களால் முடிந்ததைச் செய்து அவர்களைக் காத்து வருகிறோம்” என்றார்.
டாக்டர் அரவிந்த் தங்கராஜிடம் பேசினோம். அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்ட உடனே எதாவது செய்து அவர்களைக் காக்க வேண்டும் என நினைத்தேன். அதன்படி உணவு கொடுக்க ஏற்பாடு செய்தேன். இப்போதுள்ள சூழலில் தொடர்ந்து என்னால் பொருளாதார உதவியைச் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. இருக்கும்வரை செய்வேன். அத்துடன் அவர்களின் நிலையை வருவாய்த்துறையின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளேன். என்னைப் பொறுத்தவரை அவர்களுக்கு உணவு கிடைக்க வேண்டும். பசியோடு ஒருநாளும் இருக்கக் கூடாது” என்றார் உற்சாகத்துடன்.
அப்பகுதி மக்களிடம் பேசினோம். முன்பெல்லாம் மாடுகளுக்கு வேடமிட்டு பூம் பூம் மாட்டை அழைத்துக்கொண்டு வீடு வீடாகச் சென்று குறி சொல்வோம் அதன் பின்னர் அவர்கள் கொடுக்கும் அரிசி உள்ளிட்ட பொருள்களை வைத்து குடும்பத்தை நடத்தினோம். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. எங்க குலத்தொழில் அழிந்துவிட்டது. அதனால் கூலி வேலைக்குச் சென்று பிழைத்து வருகிறோம். மூன்று வேளை வயிறு நிறைய சாப்பிடமுடியாத அளவிலான வருமானம் இல்லை என்றாலும் எங்க தலையெழுத்து இதுதான் என வாழ்கையை நடத்தி வந்தோம்.
ஆனால் இப்போ அதுக்கே வழியில்லாமல் தவித்தோம். இப்படியொரு நேரத்துல கடவுள் மாதிரி அந்த டாக்டர் வந்து உதவி செஞ்சார்” என்கின்றனர்.
உணவில்லாமல் தவிக்கும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் உணவு கொடுக்க அரசிடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. இங்கு வாழும் ஏழை எளிய மக்களுக்கு உணவு கொடுக்க இந்த அரசு முன்வருமா…?
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…