செய்திகள்

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன்

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன்.

இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், ஏ. இராமசாமி முதலியார் ஆகியோருடன், தாழ்த்தப்பட்டோர்களின் சார்பாக டாக்டர் அம்பேத்கர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளை பிரிட்டிஷ் நாட்டின் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் விருந்துக்கு அழைத்திருந்தார். ஒவ்வொரு பிரதிநிதியும் தம்மை அறிமுகப்படுத்தி மன்னருடன் கைக்குலுக்கினர். இரட்டைமலை சீனிவாசன் மட்டும் கைகலக்காமல் தன் கையை இழுத்துக் கொண்டு விட்டார். திகைத்து நின்ற மன்னர், ‘ஏன்’?- என்று காரணம் கேட்டார். அப்போது “நான், எங்கள் நாட்டில் ஒரு தீண்டத்தகாதவன்; என்னை நீங்கள் தீண்டக்கூடாது; நான் பறையன்; இந்தியாவில் தீண்டப்படாத சமுதாயத்திலிருந்து வந்தவன்” – என்று கூறினார். தாம் அணிந்திருந்த கோட்டில், ‘இராவ் சாகிப் இரட்டை மலை சீனிவாசன், பறையன்; தீண்டப்படாதவன்’ என்று எழுதி மாட்டிக் கொண்டிருந்தார். மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் கை குலுக்க முனைந்தபோது, சீனிவாசன் மறுத்து, தன்னைத் தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளும் என்ற நிலை உள்ளதை உணர்த்தினார். ஆனால், மன்னரோ அவரை அருகே அழைத்து, கை குலுக்கினார்.

அப்போது மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் “உங்கள் நாட்டில் இப்படிப்பட்டவர்கள் யாராவது கீழே விழுந்துவிட்டால் கூடத் தூக்கிவிட மாட்டார்களா? அவர்கள் சாதியின் பெயரால் அப்படியே கிடக்கத்தான் வேண்டுமா?”-என்று விழி பிதுங்க வினாத் தொடுத்தார். “ஆமாம்; உங்கள் ஆட்சியிலே, இந்தியாவிலே இது தான் நடைபெறுகிறது” என்று பதில் மொழி பகன்றார். மேலும், இந்த வட்டமேசை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன் பேசுகிறபோது, “தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்; அப்போதுதான் தீண்டாமைக் கொடுமை ஒழியும். சட்டமன்றத்திலும், ஆதிதிராவிடர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்; அப்போதுதான் அவர்கள் முன்னேற்றம் அடைய முடியும்” -என்று வலியுறுத்தினார்.

பிறப்பு

செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் என்னும் சிற்றூரில் 07.07.1859 ஆம் நாள், இரட்டைமலை-ஆதிஅம்மையார் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ‘இரட்டைமலை சீனிவாசன்’!
அவரது குடும்பம் செங்கற்பட்டு மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, பல துன்பங்கள் அடைந்தது. அதனால், தஞ்சை மாவட்டத்திற்கு பிழைக்கச் சென்றது. அங்கேயும் தாழ்த்தப்பட்டவர்கள் வயலில் அடிமை வேலை செய்ய வேண்டும் – முழங்காலுக்கு கீழே வேட்டி உடுத்தக் கூடாது-செருப்புப் போடக் கூடாது-சட்டை அணியக் கூடாது-உயர்ந்த வகை உணவு உண்ணக் கூடாது-என்று மிருகத்தை விடக் கேவலமாக நடத்தப்பட்டனர்; ஒடுக்கப்பட்டனர்; மேலாதிக்கத்தினரால் மிதிக்கப்பட்டனர். இரட்டைமலை சீனிவாசன் அவர்கள், 1887 ஆம் ஆண்டில் ரெங்கநாயகி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகளும் பிறந்தனர்

தாழ்த்தப்பட்டோரின் முதல் பட்டதாரி

திண்ணைப் பள்ளியில் தனது தொடக்கக் கல்வியை முடித்தார். பட்டினியும், பசியும், வறுமையும் கூடவே விரட்டியது. ஆனாலும், பெற்றோருடைய விடா முயற்சியாலும், கல்வி மீது கொண்டிருந்த பேரார்வத்தாலும் தஞ்சையில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். குடும்பத்தின் வறுமையினையும் தாங்கிக் கொண்டு கோயம்புத்தூர் அரசினர் கலைக் கல்லூரியில் சேர்ந்தார். இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்றார். தமிழகத்திலேயே தாழ்த்தப்பட்டோரின் முதல் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றார்.

ஆரம்பகாலப் பணிகள்

நீலகிரியில் கிழக்கிந்தியக் கம்பெனியில் 1882 ஆம் ஆண்டு எழுத்தர் பணியில் சேர்ந்தார். ஒரு மனிதன் சமுதாயச் சிந்தனையாளராக-சீர்திருத்தவாதியாக-போராட்டக்காரராக-உருவாக அந்த மனிதன் இளமையில் பட்டத் துன்பங்களும், அடைந்த அவமானங்களும், அனுபவித்தக் கொடுமைகளும் காரணமாக அமைகின்றன. இரட்டைமலை சீனிவாசன் தான் பள்ளி, கல்லூரி வாழ்க்கையின்போது அடைந்த துன்பங்களும், சாதிக் கொடுமைகளும் நாளடைவில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் விடுதலைக்குத் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளத் தூண்டின.

இரட்டைமலை சீனிவாசன் 1891 ஆம் ஆண்டு ‘பறையன் மகாஜன சபை’ எனும் அமைப்பைத் தோற்றுவித்தார். அந்த அமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்டோரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வைசிராயிடமும், ஆளுநரிடமும் முறையீடு செய்தார்.

காந்தியடிகளின் கையெழுத்து

இரட்டைமலை சீனிவாசன் 1904 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்குச் சென்றார். அங்கு நேட்டால் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியில் சேர்ந்தார். அப்போது காந்தியடிகள் அங்கு வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். காந்தியடிகள் ‘மோ.க.காந்தி’ என்று தமிழில் கையெழுத்து இடக்காரணமாக இருந்தவர் இரட்டைமலை சீனிவாசன் என்பது வரலாற்றுப் பதிவு! தென்னாப்பிரிக்காவல் 1920 ஆம் ஆண்டுவரை பணி புரிந்தார்.

சட்டமன்ற உறுப்பினராக அவருடைய பங்கு

இரட்டைமலை சீனிவாசன் 1923 முதல் 1938 வரை சட்டமன்ற நியமன உறுப்பினராகச் செயல்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றவர்களுக்குச் சமமாகப் பொதுச் சாலைகளில் நடக்கவும், பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், பொது இடங்களிலும், கட்டிடங்களிலும் நுழையவும் உரிமை அளிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை 1924 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் நாள் கூடிய சட்ட நிர்ணய சபையில் கொண்டு வந்து நிறைவேற்றச் செய்தார்.

தாழ்த்தப்பட்டோர் கல்விக் கழகம்

தாழ்த்தப்பட்டோர் கல்வி கற்க ‘தாழ்த்தப்பட்டோர் கல்விக் கழகம்’ எனும் அமைப்பை உருவாக்கினார். சென்னை மாகாணம் தழுவிய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி கற்க அதிகமான விடுதிகளும், கல்வி உதவிப் பணமும், மற்ற வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். ஆரம்பக் கல்வி, இலவசமாகவும் கட்டாயமாகவும் தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்பட வேண்டுமெனில், தனிப் பள்ளிகள் திறக்கப்பட கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதை முன்வைத்து முனைப்போடு செயல்பட்டார். ‘தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வெளிநாடு சென்று உயர்கல்வி பயில அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். ஒடுக்கப்பட்ட சாதி இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேரும் வயதை ஏனைய, வேறு சாதியினர் வயதுடன் ஒப்பிடக்கூடாது; வறுமை, ஏழ்மை ஆகிய காரணங்களால் ஒடுக்கப்பட்ட மாணவர்கள், குறிப்பிட்ட வயதில் பள்ளியில் சேர்ந்து படிக்க இயலாத காரணத்தால், வயது வரம்பை தளர்த்திட வேண்டும்’– என்றெல்லாம் இரட்டைமலை சீனிவாசன் அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.

மாத மற்றும் வார இதழ்கள்

இரட்டைமலை சீனிவாசன் 1893 ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் ‘பறையன்’ என்ற தமிழ் மாத இதழை வெளியிட்டார். அவ்விதழ் பின்னர் வார இதழாக வெளிவந்தது. ‘பறையன்’ வார இதழ் ஒன்றை திறனாய்விற்காக ‘சுதேசமித்திரன்’ இதழுக்கு அனுப்பி வைத்தார். அப்போது, சுதேசமித்திரனின் ஆசிரியராக இருந்த சி.ஆர். நரசிம்மன் (பார்ப்பனர்), ‘பறையன்’ இதழைக் கையில் தொடவும் கூசினார். மை, தொட்டு எழுதும் கட்டைப் பேனாவைக் கையில் பிடித்துக் கொண்டு குச்சியால் அவ்விதழைப் புரட்டுவதுபோல் புரட்டிப் பார்த்தாராம்! அச்செய்தி, ஓர் உண்மையைத் தாங்கி நிற்கிறது. ஆம், ‘தாழ்த்தப்பட்டவர்கள்’ – என்போர் மட்டும் தீண்டத்தகாதவர்கள் அல்ல; அவர்கள் நடத்தும் ‘செய்தி இதழும்’ கூட தீண்டத் தகாதது’ – என்ற பாதகமான நிலை படித்தோர் மத்தியிலும், அன்று இருந்தது என்பதை அறிய முடிகிறது. இதன்மூலம், உயர் சாதியினரின் தீண்டாமைத் தீயை ‘சுதேசமித்திரன்’ கூட, ஊதிப் பெருக்கியிருக்கிறதே தவிர, ஒடுக்கப்பட்டவர்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களை அணைக்க முன்வரவில்லை என்றே கருத முடிகிறது.

பறையன் இதழ் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை முழக்கமாக விளங்கியுள்ளது. பார்ப்பனியத்தை எதிர்த்தும், அம்பலப்படுத்தியும், ஒடுக்கப்பட்ட மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்துள்ளது.

1895ல் சென்னையில் மாநாடு

சென்னை விக்டோரியா மண்டபத்தில் 07-10-1895- ஆம் நாள் ஓர் மாநாட்டைக் கூட்டினார். அம்மாநாட்டின் மூலம், அரசுத் துறைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். மேலும் அம்மாநாட்டில், “நாங்கள் கணக்கிட முடியாத ஆண்டுகளாக கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றோம். எங்களுடைய கோரிக்கைகள் நியாயமானது. எதிர்காலத்தில் எங்கள் இனம் சமத்துவமாக வாழ சமாதானத்துடனும் வாழ எண்ணுகிறது. எங்களுடைய முன்னேற்றத்தில் மற்றவர்கள் இனிமேலும் குறுக்கிட்டால் நாங்கள் இனிமேலும் சகித்துக் கொள்ளமாட்டோம். நாங்கள் எந்த விதமான கொடுமைகளையும் ஏற்க மாட்டோம்”-என்ற சூளுரையை நாடு அதிரும்படி வெளியிட்டார் இரட்டைமலை சீனிவாசன்!

மேலும், அரசியல் உரிமைகளை அனுபவிக்கவும், சட்டமன்றங்களில் உரிய பிரதிநிதித்துவம் பெற்றிடவும், அரசாங்க அலுவலகங்களில் இடம் பெறவும், விமானம், கடற்படை, இராணுவம், காவல்துறை, நீதிமன்றம் ஆகிய துறைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பினைப் பெற்றிடவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை வேண்டும் என முழக்கமிட்டார்.

பச்சையப்பன் கல்லூரி

சென்னை மைலாப்பூர் நீதிபதி வசிக்கும் வீட்டிற்கு அருகில் “பிராமணர் தெரு, பறையர் உள்ளே வரக்கூடாது”– என்ற அறிவிப்புப் பலகை இருந்தது. அதை உடனடியாக அகற்றவும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் சேர்க்கப்படாத கொடுமையை கண்டித்தும் இரட்டைமலை சீனிவாசன் பிரிட்டிஷ் ஆளுனரிடம் கோரிக்கையை முன்வைத்து வாதாடினார். பிறகு அந்த அறிவிப்புப் பலகை அகற்றப்பட்டது. பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்! இவை, அன்று பரபரப்பு ஊட்டிய வரலாற்று நிகழ்ச்சிகள்.

பஞ்சமி நிலம்

கிருஷ்ணா மாவட்டத்தில் 28.04.1894 ஆம் நாள், தமது தலைமையில் நிலப் போராட்டத்தை இரட்டை மலை சீனிவாசன் துவக்கினார். இப்போராட்டத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆங்கிலேய அரசு நிலம் அளித்தது. இந்நிலத்திற்கு ‘பஞ்சமி’ நிலம் என்ற பெயரும் வைத்தது!

தீண்டாமை

தீண்டாமையை அடியோடு ஒழிப்பதற்கு சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வந்தார். தீண்டாமைக் கொடுமை புரிபவர் எவராக இருந்தாலும் அவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, தண்டனை அளித்து அவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று கடுமையாக சட்டமன்றத்தில் பேசினார்.

சிறையாலும் சாதிப் பாகுபாடு நிலவியதை கண்டித்ததுடன், குற்றவாளிகளில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பார்க்காமல் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்று குரல் எழுப்பினார்.

மதுக்கடைகளை மூடவேண்டும்

தமிழக சட்டமன்ற மேலவையில், “பல ஏழை மக்களின் உயிரைக் குடிக்கும் மதுக்கடைகளை மூடவேண்டும்” – என்ற தீர்மானத்தை இரட்டைமலை சீனிவாசன் கொண்டுவந்தார். மேலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும், விழா நாள்களிலும், அரசு விடுமுறையின் போதும், மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்து நிறைவேற்றச் செய்தார். ஏழை எளிய மக்கள் மதுவுக்கு அடிமையாகி, தங்களுடைய வாழ்க்கையை அழித்துக் கொள்கின்றனரே என மனம் வருந்தினார். இக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்திட அரும்பாடுபட்டார்.

கோயில்களில் சாதி

ஆதிதிராவிடர் கோயில்களில் ஏனைய சாதியைச் சேர்ந்தவர்கள் உள்ளே செல்லலாம். ஆனால், சாதி இந்துக்களின் கோயில்களில் ஆதிதிராவிடரை அனுமதிக்காமல் இருப்பது அநீதி அல்லவா? மண் சுமந்து கோயிலைக் கட்டும் சாதி மக்கள் கோயிலுக்குள் செல்ல தடைவிதிப்பது கொடுமையல்லவா? பார்ப்பனர்கள், வருமானம் பெற அனைத்துக் கோயில்களையும் கைப்பற்றிக் கொண்டது கண்டனத்துக்குரியதல்லவா? என்று அடுக்கடுக்காகக் கேள்விக் கணைகளைத் தொடுத்தவர் இரட்டைமலை சீனிவாசன்! மற்ற சாதி மக்கள் எப்படி சுதந்திரமாகக் கோயிலுக்குள் செல்கின்றார்களோ, அதைப் போல் ஒடுக்கப்பட்ட மக்களும் செல்ல உரிமை வேண்டும் என்று உரத்துக் குரல் கொடுத்தார்.

பூனா ஒப்பந்தம்

இலண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில், டாக்டர் அம்பேத்கரும், இரட்டைமலை சீனிவாசனும் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கொண்டு வந்த தனித் தொகுதி முறையை காந்தியடிகள் கடுமையாக எதிர்த்தார். எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்தார்.

தனித்தொகுதி என்பது தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் அளிக்கப்படவில்லை. இந்தியக் கிருத்தவர், அய்ரோப்பியர், முஸ்லீம்கள், சீக்கியர் ஆகியோர் அனைவருக்கும் அளித்துள்ளனர். ஏன் காந்தியடிகள் தாழ்த்தப்பட்டவர்களை மட்டும் பிரித்து இந்த நிலையை எடுத்துள்ளார் என்பது விசித்திரமாக இருக்கிறது”- என்றார் டாக்டர் அப்பேக்கர். இறுதியில் காந்தியடிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டி, காந்தியடிகள் விருப்பத்துக்கு விட்டுவிட்டார் அப்பேத்கர். அது பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. டாக்டர் அம்பேத்கரும், இரட்டைமலை சீனிவாசனும் பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு பெயர்கள்

இரட்டைமலை சீனிவாசனின் பணிகளைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு, அவருக்கு ‘இராவ்சாகிப்’, ‘திவான் பதூர்’, ‘இராவ் பகதூர்’ ஆகிய பட்டங்களை அளித்துச் சிறப்பித்தது. இரட்டை மலை சீனிவாசனின் பணியைப் பாராட்டி திரு.வி.க. அவர்கள், ‘திராவிடமணி’ எனும் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

இறப்பு

கொத்தடிமைகளாக வாழ்ந்த மக்களை சுதந்திர மக்களாக்கியவர்!-மூடப் பழக்கங்களில் மூழ்கிப் போனவர்களை சிந்திக்கும் மனிதர்களாகச் செதுக்கியவர்! – இருண்ட உலகில் பயணம் செய்தவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்! ஊமைச் சமுதாய மக்களைப் பேச வைத்தவர்! – உரிமைகளைப் பெற வைத்தவர்!- ஒதுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், தத்தளித்துக் கிடந்த மக்களின் கலங்கரை விளக்கமாக விளங்கியவர்! தான் உறங்காமல், உறங்கிக் கொண்டிருந்தவர்களைத் தட்டி எழுப்பி உசிப்பியவர்! தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகப் போராடிய ‘உத்தமர் தாத்தா’! அப்பெரியவர் இரட்டைமலை சீனிவாசன் 18.09.1945 ஆம் நாள் தனது எண்பத்தி ஆறாம் வயதில் இயற்கை எய்தினார்.

இந்திய நடுவண் அரசு, 15.08.2000 இல் இரட்டைமலை சீனிவாசனுக்கு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பு செய்தது.

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago