காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் (Hydrocarbon) திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் காவிரிபடுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் கண்டன பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முற்றுகை, ஆட்சியர்களிடம் மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.
ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு பேரணி
இதற்காக மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்காண விவசாயிகள் திரண்டு வந்திருந்தனர். தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திணறும் அளவில் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை கல்லூரி மாணவர்கள் கல்லூரி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மத்திய மாநில அரசுகளே விவசாயத்தை அழிக்காதே என்று தர்ணா போராட்டத்தில ஈடுபட்டதுடன் பலர் விவசாயிகளுடன் பேரணி, முற்றுகை போராட்டத்திலும் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலும் நெடுவாசல் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இருந்து புதுக்கோட்டை அரசு பொது அலுவலகங்கள் வளாகத்தில் திரண்ட விவசாயிகள் முழக்கங்களுடன் சுமார் ஒரு கி. மீ. தூரத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று மனு கொடுத்தனர்.
கல்லூரி மாணவர்கள் போராட்டம்
விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் களமிறங்கியுள்ளனர். தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் 500க்கு மேற்பட்டோர், வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என அவர்கள் வலியுறுத்தினர்.