Pattukottai:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பழஞ்சூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 600 ஆண்டுகள் பழமையான பழமலைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் இப்பகுதி மக்களிடையே பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு
இதையொட்டி இக்கோவில் வளாகத்தில் போர்வெல் அமைக்கும் பணி இன்று காலை தொடங்கியது. இதற்காக தொழிலாளர்கள் குழி தோண்டும் வேலையில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 7 அடி அளவிற்கு குழி தோண்டிக் கொண்டிருந்தபோது வித்தியாசமான வகையில் ஏதோ சத்தம் கேட்டதால் அவர்கள் மெதுவாக குழியை தோண்டி பார்த்தனர். அப்போது அங்கு சுவாமி விக்ரகம் புதைந்து கிடப்பதை கண்டெடுத்தனர். பின்னர் மேலும் தோண்டிப் பார்த்தபோது அடுத்தடுத்து நடராசர், விநாயகர், பார்வதி உள்ளிட்ட சுமார் 14 சாமி சிலைகள் கிடைத்தன. இதையடுத்து அனைத்து விக்ரகங்களையும் வெளியில் எடுத்து அடுக்கி வைத்தனர். அப்போது அந்த சாமி சிலைகள் ஐம்பொன்னால் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அறநிலையத்துறையினருக்கு கோவில் நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், அதிராம்பட்டினர் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் அங்கு வந்து சிலைகளை பத்திரமாக எடுத்து சென்று கோவில் வளாகத்தில் வைத்தனர்.
தொல்லியல்துறை
இதையடுத்து சேகர் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ. கோவிந்தராஜ், தாசில்தார் ரகுராம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, கோபாலகிருஷ்ணன், அறநிலையத்துறை சுரங்க ஆய்வாளர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகளை பார்வையிட்டனர். தொடர்ந்து அடுத்தடுத்து சாமி சிலைகள் கிடைத்து வருவதால் மேலும் அப்பகுதியில் சாமி சிலைகள் புதைந்துள்ளதா? என்றும் ஆய்வு நடத்தி அதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட சிலைகள் எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்பது தொல்லியல்துறை ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும் என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஒரே நேரத்தில் 14 ஐம்பொன் சாமி விக்ரகங்கள் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து ஏராளமானோர் வந்து கண்டெடுக்கப்பட்ட சுவாமி பார்வையிட்டு விக்ரகங்களை வழிபட்டு செல்கின்றனர்.