செய்திகள்

பாலாறு பிரச்சினையில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும்: ஜெயலலிதா

காவிரி, முல்லைப் பெரியாறு போலவே பாலாறு நதிநீர்ப் (Palar River) பிரச்சனையிலும் தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். இந்த விவகாரத்தில், மக்களை ஏமாற்றும் வகையில் அறிக்கை வெளியிட்டிருப்பதாக, திமுக தலைவர் கருணாநிதியை அவர் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது உறவுக்கு கை கொடுப்பதும், ஆட்சி அதிகாரம் இல்லாத போது, உரிமைக்கு குரல் கொடுப்பது போல் நடிப்பதும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கை வந்த கலை.

அந்த வகையில், ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடவோ; முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழக நலன்களை பாதுகாக்கவோ; நடவடிக்கைகள் எதையும் எடுக்காத தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஆட்சி அதிகாரத்தையும், மக்கள் செல்வாக்கையும் முற்றிலும் இழந்த சூழ்நிலையில், தற்போது பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து அறிக்கை வெளியிட்டு இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது.

“முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது” என்ற பழமொழிக்கேற்ப, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை என்ற ஆந்திரப் பிரதேச அரசின் அத்துமீறிய செயலை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று, அங்கு தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்தியதே எனது தலைமையிலான அரசு தான் என்பதை முற்றிலும் மறைத்து விட்டு, இந்தப் பிரச்சனையில் தான் ஏதோ மிகப் பெரிய சாதனையை செய்துள்ளது போல் தனது அறிக்கையில் தன்னை சித்தரித்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதியின் அறிக்கை, தான் இன்னமும் அரசியலில் இருக்கிறேன் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக விடுக்கப்பட்ட அரசியல் ஆதாயம் தேடும் அறிக்கை போல் தான் அமைந்துள்ளது.

பாலாறு நதி

இந்தச் சூழ்நிலையில், பாலாறு நதிநீர்ப் பிரச்சனை குறித்த உண்மை நிலையை விளக்குவது எனது கடமையென கருதுகிறேன். பன்மாநிலங்களுக்கிடையே பாயும் நதிகளில் ஒன்றான பாலாறு, கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகி, ஆந்திர மாநிலம் சித்தூர் வழியாக, தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டத்தில் நுழைந்து, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது. 1892-ஆம் ஆண்டைய சென்னை-மைசூர் ஒப்பந்தத்தின் அட்டவணை ‘A’-வில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் 15 முக்கிய நதிகளில் பாலாறும் ஒன்றாகும்.

இந்த ஒப்பந்தத்தின்படி, மேற்பகுதியில் உள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியில் உள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல் புதிய அணைக்கட்டையோ, அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானங்களையோ, அல்லது நீரைத் திருப்புவதற்கும், நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது.

சித்தூர் மாவட்டத்தில் குப்பம் என்னும் பகுதிக்கு அருகே பாலாற்றின் குறுக்கே 2 டி.எம்.சி. அடி நீரைத் தேக்கும் வகையில் ஓர் அணையினை ஆந்திரப் பிரதேச அரசு கட்ட இருப்பதாகவும், அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன எனவும் தகவல்கள் செய்தித் தாள்களில் எனது ஆட்சிக் காலத்தில் 4.1.2006 அன்று வெளிவந்தவுடன், 5.1.2006 அன்றே 1892 ஆம் ஆண்டைய ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி, பாலாற்றின் குறுக்கே அணைக் கட்டும் திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி ஆந்திரப் பிரதேச முதலமைச்சருக்கு விரிவான கடிதம் ஒன்றை அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த நான் எழுதினேன்.

இதன் தொடர்ச்சியாக, 1.2.2006 அன்று மத்திய நீர் வளத் துறை அமைச்சகத்திற்கும் ஒரு கடிதம் எனது அரசால் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்தில் 1892 ஆம் ஆண்டைய ஒப்பந்தத்தின்படி, ஆந்திரப் பிரதேசத்தில் பாயும் பன் மாநிலங்களுக்கு இடையே பாயும் நதியான பாலாற்றில் எந்த விதமான பாசனத் திட்டத்தையும் ஆந்திரப் பிரதேச அரசு நிறைவேற்றுவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.

என்னுடைய கடிதத்திற்கு ஆந்திர முதலமைச்சரிடமிருந்தோ அல்லது ஆந்திர அரசிடமிருந்தோ எவ்வித பதிலும் வராத சூழ்நிலையில், தமிழக மக்களின் நலன்களை காப்பதற்காக, பாலாற்றின் குறுக்கே அணைக் கட்ட திட்டமிட்டு இருக்கும் ஆந்திரப் பிரதேச அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி 10.2.2006 அன்று உச்ச நீதிமன்றத்தில் எனது முந்தைய ஆட்சிக் காலத்திலேயே வழக்கு தொடரப்பட்டது. நான் 2006 ஆம் ஆண்டு ஆட்சியில் இருக்கும் வரை, ஆந்திர அரசு இந்தத் திட்டத்தை துவங்கவில்லை.

2006-ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினை அடுத்து, மைனாரிட்டி திமுக அரசு கருணாநிதி தலைமையில் அமைந்த பின், ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் பிரச்சனையை அவ்வப்போது எழுப்பி வந்தது. அத்துடன் திட்டம் குறித்த வடிவமைப்பை தயார் செய்யும் நடவடிக்கையையும் எடுத்தது. அதனை அப்போதைக்கப்போதே, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான் சுட்டிக்காட்டி,

இதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசை நான் வலியுறுத்தினேன்.

இந்தச் சூழ்நிலையில், 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம், பாலாற்றின் குறுக்கே குப்பம் பகுதியை அடுத்த கணேசபுரத்தில் தடுப்பு அணை கட்ட வசதியாக, அந்தப் பகுதியில் மின்சார நிலையம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும்; தார் சாலை போடப்பட்டு உள்ளதாகவும்; அணை கட்டும் பகுதியில் பாறைகளின் தன்மைகளை கண்டறியும் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும்; முதல்கட்டமாக கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும்; இது குறித்த தகவல்கள் தமிழ்நாடு அரசின் பொதுப் பணித் துறைக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. அப்போது, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த கருணாநிதி, இதைப் பற்றி ஆந்திர அரசை தட்டிக் கேட்கவே இல்லை.

தமிழ்நாட்டில் 2006 முதல் 2011 வரையிலும், மத்தியில் 2013 வரையிலும் ஆட்சியிலிருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, இந்தப் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் மூலம் விரைந்து தீர்வு காணவோ; அல்லது அப்போது மத்திய அரசில் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவோ எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

நான் மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக 16.5.2011 அன்று பொறுப்பேற்ற பிறகு, உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி, மத்திய அரசின் நீர்வளத் துறை செயலாளரால் 26.5.2011 அன்று கூட்டப் பெற்ற கூட்டத்தில், எனது உத்தரவின் பேரில் ஆந்திரப் பிரதேச மாநிலப் பகுதியில் பாலாற்றில் எவ்விதமான புதிய திட்டத்தையும் ஆந்திர அரசு மேற்கொள்ளக் கூடாது என தமிழக அரசின் சார்பில் ஆணித்தரமாக எடுத்துரைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 14.6.2011 அன்று அப்போதைய பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கை நான் புது டெல்லி சென்று சந்தித்து, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட உத்தேசித்துள்ள திட்டத்தை மேற்கொள்ளக் கூடாது என ஆந்திர மாநில அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

இதனையடுத்து, 4.7.2011 நாளைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, இரு மாநிலங்களும் தங்களது வாதங்களில் உள்ள நியாயத்தை எடுத்துரைக்கும் வகையில் சாட்சிகளை நியமித்துள்ளன. தமிழ்நாடு அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட சாட்சியிடம் தற்போது குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அடுத்த குறுக்கு விசாரணைக்கான நாள் வரும் ஜூலை மாதம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

இரு மாநிலங்களைச் சார்ந்த சாட்சிகளின் குறுக்கு விசாரணை முடிந்த பிறகு, தமிழ்நாடு அரசு, ஆந்திரப் பிரதேச அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவற்றின் வாதங்களை கேட்டறிந்து, அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், ஆந்திரப் பிரதேச மாநிலம் குப்பத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அறிவித்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இந்தப் பிரச்சனை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும்; பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக் கூடாது என்று மத்திய நீர்வள ஆணையம் ஆந்திர பிரதேச அரசுக்கு அறிவுறுத்தியுள்ளதாலும்; பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது என்பது சாத்தியமற்ற செயல்.

எனினும், இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்த உடனேயே நான் அரசு உயர் அதிகாரிகளுடன் இது குறித்து ஆலோசித்தேன். எனது அறிவுரையின்படி, தமிழ்நாடு அரசால் தொடரப்பட்டுள்ள வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கும் வரை, அங்கு எந்தத் திட்டத்தையும் மேற்கொள்ளக் கூடாது என ஆந்திரப் பிரதேச அரசுக்கு அறிவுரை வழங்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் 20.6.2014 அன்றே கடிதம் எழுதியுள்ளார்.

இந்தப் பிரச்சனையை நான் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். காவிரி நதிநீர்ப் பிரச்சனையிலும், முல்லைப் பெரியாறு நதிநீர்ப் பிரச்சனையிலும், எப்படி தமிழ்நாட்டின் உரிமை என்னால் நிலைநாட்டப்பட்டதோ, அதே போன்று பாலாறு நதிநீர்ப் பிரச்சனையிலும் தமிழ்நாட்டின் உரிமை நிலை நாட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாலாறு நதிநீர்ப் பிரச்சனை குறித்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அறிக்கை, ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது “கோட்டை விட்டுவிட்டு,” ஆட்சி அதிகாரத்தை இழந்த சூழ்நிலையில், எதையோ நினைத்து “மனக்கோட்டை” கட்டுவது போல் அமைந்துள்ளது. கருணாநிதியின் மற்ற அறிக்கைகளைப் போலவே, இந்த அறிக்கையும் தமிழக மக்களை ஏமாற்றும் செயல். கருணாநிதியை இனி எக்காலத்திலும் நம்பத் தமிழக மக்கள் தயாரில்லை” என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

3 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

3 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

3 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

3 years ago