கேரள கோயில்களில் அர்ச்சகர்களாகப் பணியாற்றுவதற்கு தலித் வகுப்பைச் சேர்ந்த 6 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளது.
கேரள இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயில்களில் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்களை அர்ச்சகர்களாகப் பரிந்துரைப்பது இதுவே முதன்முறையாகும். அவர்களைத் தவிர, பிராமணியர் அல்லாத 30 பேரும் அப்பொறுப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 1,248 கோயில்கள் உள்ளன. அவற்றில் காலியாக உள்ள 62 அர்ச்சகர் பணியிடங்களை நிரப்புவதற்காக அண்மையில் எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டன. அவற்றை மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. அந்த அடிப்படையில் தகுதியானவர்களை பரிந்துரைக்கும் பொறுப்பு தேவஸ்வம் வாரியத்துக்கு உண்டு.
அதன்படி, 62 அர்ச்சகர்களை நியமித்து ஆணை வழங்கியுள்ளது. அதில் 26 பேர் பிராமணர்கள், மீதமுள்ள 36 பேர் பிராமணரல்லாத சாதிகளைச் சேர்ந்தவர்கள், அதில் தலித்துகள் 6 பேரும் அப்பொறுப்புகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தலித்துகளை அர்ச்சகர்களாகப் பரிந்துரைப்பது இதுவே முதன்முறை என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கேரள இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி ராமச்சந்திரன், அர்ச்சகர் நியமனங்கள் தகுதி அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றார்.
கேரள அரசைப் பின்பற்றி தமிழக அரசும் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு முன்வர வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், ”1924-ம் ஆண்டு தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அதன் தொடர்ச்சியாகவே 1936-ல் கோயில் நுழைவு சட்டம் இயற்றப்பட்டது. வைக்கத்தில் கோயில் இருந்த வீதி வழியாக நடப்பதற்கே போராட்டம் நடத்தப்பட்ட கேரளாவில் இப்போது இந்தியாவிலேயே முதல் முறையாக தலித்துகள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உத்தரவைப் பிறப்பித்துள்ள கேரள இடதுசாரி அரசாங்கத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமாரப் பாராட்டுகிறோம்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றி சமூக நீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டிய தமிழக அரசு கேரள முன்மாதிரியைப் பின்பற்றி இங்கும் அர்ச்சகர்கள் நியமனங்களில் தலித்துகளுக்கு உரிய இடமளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோயில்களில் அர்ச்சகர் பணியில் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு 32 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பது என கேரள அரசு முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு இப்போது 62 அர்ச்சகர்களை நியமித்து ஆணை வழங்கியுள்ளது. அதில் 26 பேர் பிராமணர்கள்; மீதமுள்ள 36 பேர் பிராமணரல்லாத சாதிகளைச் சேர்ந்தவர்கள்; அதில் தலித்துகள் 6 பேர்!
பழமைவாதிகள் இன்றளவும் செல்வாக்கு செலுத்திவரும் கேரள கோயில்களில் தலித்துகள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சமூகப் புரட்சியாகும். இதை சாதித்துக் காட்டியிருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று 2006 ஆம் ஆண்டு அன்றைய திமுக அரசு இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 2007 ஆம் ஆண்டு மாநில அரசு நடத்திய பயிற்சிப் பள்ளிகளில் சேர்ந்து தலித்துகள் உள்ளிட்ட பிராமணரல்லாத சாதிகளைச் சேர்ந்த 206 பேர் அர்ச்சகர் பயிற்சி பெற்றனர். ஆனால் அவர்கள் எவருக்கும் இதுவரை தமிழக அரசு பணிநியமன ஆணையை வழங்கவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.
தமிழக அரசு இயற்றிய சட்டத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் தகுதி அடிப்படையில் அர்ச்சகர் பணி நியமனம் செய்யலாம் என ஒப்புக்கொண்டுள்ள நிலையில் தமிழக அரசு மவுனம் சாதிப்பது சமூகநீதிக்கு உகந்தது அல்ல. எனவே, உடனடியாக கேரள அரசைப் பின்பற்றி தமிழக அரசும் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு முன்வர வேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…