நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான நவரத்னா குருமா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது நாண் செய்து சாப்பிட திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் நிறைய காய்கறிகள் உள்ளதா? அதே வேளையில் பன்னீரும் உள்ளதா? அப்படியானால் நவரத்னா குருமா செய்யுங்கள். இந்த நவரத்னா குருமா சப்பாத்தி, நாண், பூரிக்கு மட்டுமின்றி, நெய் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் இது ஒரு சத்தான குருமாவும் கூட.
தேவையான பொருட்கள்:
* விருப்பமான காய்கறிகள் மற்றும் பன்னீர் – 2 கப்
* வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி – 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் – 4 (கீறியது)
* புதினா – சிறிது
* பிரியாணி இலை – 2
* கிராம்பு – 3
* ஏலக்காய் – 3
* பட்டை – 2 துண்டு
* சீரகம் – 1/4 டீஸ்பூன்
* சோம்பு – 1/4 டீஸ்பூன்
* தயிர் – 1 கப்
* நெய் – 4 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* கொத்தமல்லி – சிறிது (அலங்கரிக்க)
* கறிவேப்பிலை – சிறிது
அரைப்பதற்கு…
* முந்திரி – 10
* பால் – 1/2 கப்
* துருவிய தேங்காய் – 1/2 மூடி
* சுடுநீர் – 1 கப்
மசாலா பொடிகள்…
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 3 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் முந்திரி மற்றும் பாலை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் துருவிய தேங்காயை நீர் சேர்த்து மென்மையாகவும் கெட்டியாகவும் அரைத்து, சுடுநீரை ஊற்றி 2 கப் தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து லேசாக வறுத்து, வெதுவெதுப்பான நீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும். பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, ஏலக்காய், சீரகம், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், புதினா சேர்த்து வதக்கி, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தக்காளியை சேர்த்து தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் மஞ்கள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து ஒருமுறை வதக்கி, அதைத் தொடர்ந்து காய்கறிகளை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் ஒரு கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின்பு அதில் தேங்காய் பால், அரைத்த முந்திரி பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறி, நீரில் ஊற வைத்துள்ள பன்னீரைப் பிழிந்து விட்டு, அந்த பன்னீரையும் குக்கரில் போட்டு குறைவான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
* இறுதியாக அதில் தயிரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நெய் மேலே மிதக்கும் வரை கொதிக்க வைத்து இறக்கி மேலே கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையைத் தூவினால், சுவையான நவரத்னா குருமா தயார்.
Image Courtesy: spiceindiaonline
இந்த பதிவின் மூலமாக நவரத்னா குருமா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி நவரத்னா குருமா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .