பட்டுக்கோட்டையில் நாடியம்மன் (Nadiamman Temple ) என்ற பெண் தெய்வத்தை மக்கள் வழிபட்டு வருகின்றனர்.(நாடி+அம்மன்= நாடியம்மன்) தன்னை நாடிவந்து வழிபடுபவர்களுக்கு நல்லதை செய்யும் அம்மன் நாடியம்மன் எனப்படுகிறது. பெரும்பாலும் நாடிமுத்து என்ற பெயர் இவ்வூரைச் சேர்ந்தவர்கள் அதிகஅளவில் வைத்துக் கொள்கிறார்கள். அந்தப் பெயரும் இந்த அம்மன் பெயரால் ஏற்பட்டதுதான்.
இடம் : பட்டுக்கோட்டை
தாலுகா: பட்டுக்கோட்டை
மாவட்டம் : தஞ்சாவூர்
பட்டுக்கோட்டை, தஞ்சாவூருக்குத் தென்கிழக்கே 47 கி.மீ. தொலைவில் பட்டுக்கோட்டையில் இத்தலம் அமைந்துள்ளது.
இந்த நாடியம்மன் கோயில் உருவானதற்கும் ஒரு கதை வழக்கில் இருக்கிறது. ஒருமுறை தஞ்சை மராட்டிய மன்னன் ஒருவன் காட்டில் வேட்டையாடி வந்தபோது, அப்போது குறுக்கிட்ட ஒரு மிருகத்தைத் துரத்திக் கொண்டு சென்று, அது பிடிபடாமல் போகவே அதன்மீது குறிவைத்துத் தாக்க அது ஓர் புதருக்குள் சென்று ஒளிந்து கொண்டதாம். அது அடிபட்டிருந்தால் அந்தப் புதருக்குள்தான் இருக்க வேண்டுமென்று, மன்னன் ஆட்களை விட்டு அங்கு தேடச் சொன்னான். அப்போது ஆட்கள் புதரை நீக்கிப் பார்த்த போது அங்கு ரத்தம் ஒழுக ஓர் அழகிய பிடாரியம்மன் சிலை தென்பட்டதாம். அதிர்ச்சியடைந்த மன்னன் உடனே அந்த சிலையை வெளியே கொணர்ந்து அதனை சுத்தம் செய்து, பட்டுக்கோட்டையின் கோட்டைப் பகுதியில் இருந்த சிவன் கோயில் பூசாரிகளை அழைத்து பிடாரியம்மனுக்கு அது கிடைத்த இடத்திலேயே ஓர் ஆலயம் கட்டி பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டான். அவ்வண்ணமே, அந்த பிடாரி சிலை வனாந்திரமாய் இருந்த அந்த இடத்தில் கோயில் கொண்டது.
பிறகு காட்டில் இருந்த இந்த அம்மனுக்கு நித்தியப்படி பூசைகளும், விழாக்களும் கொண்டாடும் பொறுப்பையும், ஆலயத்தைக் கட்டி நிர்வகிக்கும் பொறுப்பையும் அவ்வூரிலிருந்த சின்னான் செட்டியார் என்பவரிடம் கொடுத்து பராமரிக்கும்படி ஆணையிட்டான் மன்னன். முதலில் காட்டில் கண்டெடுத்த கருங்கல் பிடாரியம்மன் சிலையை வைத்து வழிபட்டு வந்தனர். பின்னர் செட்டியாரின் முயற்சியின் காரணமாக, இந்த அம்மனுக்கு ஓர் ஐம்பொன் சிலை வடிவமைக்கப்பட்டு வழிபாடு நடத்தலாயினர். நாளடைவில் இந்த அம்மன் நாடியம்மன் என்ற பெயர் பெற்றாள்.
இந்த அம்மன் கோவில் வயல்வெளி, பெரிய குளம் சூழ்ந்திருக்க பெரிய பெரிய குதிரை சிலைகளோடு அழகாக காட்சி தருகிறது.
கருவறையில் தீ ஜுவாலை, கிரீடம் நான்கு கரங்களில் கத்தி, சூலம், கேடயம், கபாலம் ஏந்தி ஆயுதபாணியாக சுகாசனத்தில் அமர்ந்தவாறு காட்சி தருகிறாள் நாடியம்மன்.
பங்குனி மாதத்தில் இந்த அம்மனுக்கு காப்புக் கட்டி திருவிழா தொடங்குகிறது. இது சித்திரை மாதத்திலும் தொடர்ந்து வரகரிசி மாலையுடன் உத்ஸவம் முடிவடைகிறது. திருவிழா காலங்களில் அம்மன் தனது ஆலயத்தை விட்டுக் குடிபெயர்ந்து பெரிய கடைத்தெருவின் நடுவிலுள்ள மண்டகப்படி எனும் மண்டபத்தில் குடியேறி, விடையேற்றி விழா முடிந்த பிறகுதான் ஆலயம் திரும்புகிறாள். திருவிழா அனைத்து நாட்களிலும் இரவில் அம்மன் நகர்வலம் வருகிறாள். அந்தக் காலத்தில் நாதசுர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை முதல் அனைத்து பெரிய வித்வான்களும் இரவில் அம்மன் புறப்பாட்டின்போது நடந்து வந்தே விடிய விடிய நாதசுரம் வாசித்த வரலாறு உண்டு. ஆங்காங்கே இவர்களுக்கு பெஞ்சுகளைக் கொண்டு மேடை அமைக்கப்பட்டு தொடர்ந்து பலமணி நேரம் வாசிப்பதும் உண்டு. வெண்ணைத்தாழி, தேரோட்டம் முதலான விசேஷங்களும் திருவிழா நாட்களில் உண்டு. வெண்ணைத்தாழியின் போது அம்மன் ஸ்ரீ கிருஷ்ணனைப் போல, வெண்ணைப் பானையை அணைத்துக் கொண்ட கோலத்தில் வீதிவலம் வருகையில், அவ்வூரிலுள்ளோர் வேண்டுதலையொட்டி அம்மனுக்குப் பட்டுத் துணிகளை வாங்கி அணிவிப்பார்கள். தினமும் மாலை வேளைகளில் மண்டகப்படி மண்டபத்தில் இன்னிசை விருந்தும் நடைபெறும்.
அம்மனின் ஐம்பொன் உற்சவ விக்கிரகம் கோட்டை சிவன் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். திருவிழா காலங்களில் மட்டும் மண்டகப்படிக்குக் கொண்டு வரப்படும். இந்த அம்மனின் விழாவையொட்டி, அம்மன் விக்கிரகம் கோட்டை பெருமாள் கோயிலுக்குச் சென்று சீர்வரிசை பெற்று வரும் நிகழ்ச்சியும், மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருமண நிகழ்ச்சியையும், பெருமாள் தங்கைக்குச் சீர்வரிசை செய்யும் காட்சியும் நம் நினைவுக்கு வரும்.
நினைத்ததை நடத்தி வைக்கும் சக்தி படைத்தவளாக இந்த அம்மன் விளங்குவதால், பக்தர்கள் இவளை வணங்காமல் இவ்வூரில் எந்தக் காரியத்தையும் செய்வதில்லை. இவ்வூரில் வாழும் மக்கள் ஆண்டுதோறும், இவ்வாலயத் திருவிழாவைச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள், நாடி வந்தவர்களை காக்கும் நாடியம்மன் மக்களுக்கு நல்லருள் வழங்கி பாதுகாத்து வரவேண்டுமென்று நாமும் வேண்டுவோம்.
பௌர்ணமி பூஜை செய்து இங்குள்ள நாகலிங்க மரத்தில் சரடு கட்டினால் எப்படிப்பட்ட தோஷம் இருந்தாலும் விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும்.
இங்கு மொட்டை போடுதல், அங்கப்பிரதட்சணம் போன்றவற்றோடு தாழம்பூ பாவாடை சார்த்துதல், வெண்ணெய் படையல் என்ற வித்தியாசமான நேர்த்திக் கடன்களும் வழக்கத்தில் உள்ளன.
விவசாயம் நன்கு நடைபெற வரகரிசி மாலை சாத்தி வேண்டிக் கொள்வார்கள்.
மேலும் இதுபோன்ற பதிவுகள் பார்க்க Facebook பக்கங்களை லைக் பண்ணுங்க
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…