Immunity Booster: சுத்தம், தூய்மை அவசியம்தான் என்றாலும் நம் உடலில் நோய்களுக்கு எதிரான வலிமையை அதிகரிக்கச் செய்வதும் அவசியம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலே காற்றில் சுற்றித் திரியும் நோய் கிருமிகள் அசால்ட்டாக தாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்கினால் அது கிருமித்தொற்று, வைரஸுகளோடு போராடி உடலைப் பாதுகாக்கும். இதற்காக பெரிதாக மெனக்கெட வேண்டாம். அன்றாடம் உண்ணும் உணவில் சரியாக கவனம் செலுத்தினாலே போதும்.
கைகளை கழுவ வேண்டும், இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் அவசியம்தான் என்றாலும் நம் உடலையும் அதற்கு தயாராகவும், நோய்களுக்கு எதிரான வலிமையை அதிகரிக்கவும் செய்வது அவசியம். அப்படி நோய்களை எதிர்த்துப் போராட உதவும் உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
பழங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை தருவதில் பழங்கள் முதலிடத்தில் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. இவற்றில் வைட்டமின் பி1, சி, ஏ மற்றும் உலோகச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், உலகிலேயே மிக ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. இது மேலும் உணவுப்பாதையை இயற்கையாகவே சுத்திகரிக்க வல்லது.
ஆரஞ்சு , எலுமிச்சை, சாத்துக்குடி, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் ஏதேனும் ஒன்றை தினமும் சாப்பிடுவது அவசியம். இவற்றில் உள்ள வைட்டமின் C இரத்தச் செல்களில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கும்.
பூண்டு
பூண்டு நம் பாரம்பரிய மூலிகை வைத்தியங்கள் அனைத்திலும் பூண்டும் இடம் பெறும். பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், காதல் உணர்வைத் தூண்டவும் செய்யும் அருமையான குணங்களைக் கொண்டுள்ளது. எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிகவும் அருமையானது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் கொல்லவல்லது.
இஞ்சி
இதுவும் நம் பாரம்பரிய வைத்தியங்களில் இடம் பெரும் அருமருந்து. தொண்டை வலி, சளி, இருமல் , காய்ச்சல் என எந்த நோயாக இருந்தாலும் அதற்கு இஞ்சி சிறந்த மருந்து. காரணம் இது தொற்றுக்களை வெகுவாக அழிப்பது மட்டுமன்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இதில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் எனப்படும் உடலை காக்கும் பொருள் நிறைந்துள்ளது.
கீரைகள், காய்கறிகள்
பச்சை நிறக் கீரைகள் மற்றும் காய்கறிகள், வைட்டமின் பி1, ஏ மற்றும் சி சத்துக்களைக் அதிகம் கொண்டவை. இவற்றில் துத்தநாகச் சத்தும் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், இந்த பச்சைக் காய்கறி மற்றும் கீரைகள் ஒரு சிறந்த உணவாகத் திகழ்கின்றன. இந்த உணவுகளை தவறாமல் உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டால் நோய்களை அண்ட விடாமல் நமது உடலை பாதுகாத்து கொள்ளலாம்.
கீரைகளில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் பீரா கரோடின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்குகின்றன. நன்கு வேக வைக்காமல் பாதியளவு வேகவைத்துச் சாப்பிட்டால் ஊட்டச்சத்து முழுமையாகக் கிடைக்கும்.
தயிர்
தயிரில் உடலுக்கு நல்லது செய்யும் நுண்ணுயிர்கள் நிறைந்துள்ளன. இந்த நல்ல நுண்ணுயிர்கள் செரிமான உறுப்புகளை குறிப்பாக குடற்பகுதியை நல்ல நிலையில் வைக்க உதவுகின்றன.
தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், வைட்டமின் D உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி வேகமாக செயல்பட உதவும். இதை சாதாரணமாக சாப்பிட பிடிக்கவில்லை எனில் செர்ரி பழம், வெள்ளரி என பழங்கள் கலந்தும் சாப்பிடலாம்.
மஞ்சள்
பொதுவாகவே இந்திய உணவுகளில் மஞ்சள் இடம்பெறும். நோய்களை தாக்கி அழிப்பதில் வல்லதாகச் செயல்படும் மஞ்சள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்வது அவசியம்.
இவற்றைப் பயன்படுத்தி நாம் உண்ணும் உணவை செய்து உண்ணுவோம் குடும்ப ஆரோக்கியம் காப்போம்; நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவோம்!