நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சில்லி இறால் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
இந்த வார விடுமுறையில் வீட்டில் இறால் செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளீர்களா? இறாலைக் கொண்டு கிரேவி, வறுவல், 65 என்று செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் இந்த வாரம் சற்று வித்தியாசமாக சில்லி இறால் செய்து சாப்பிடுங்கள். இந்த சில்லி இறால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு மிகவும் சுவையாக இருக்கும். இதோடு இது ஒரு அற்புதமான ஸ்டாட்டராகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு…
* இறால் – 3/4 கிலோ
* இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
* சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
* கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை
* உப்பு – சுவைக்கேற்ப
வதக்குவதற்கு…
* நறுக்கிய குடைமிளகாய் – 1 கப்
* கறிவேப்பிலை – சிறிது
* நறுக்கிய வெங்காயம் – 1/2 கப்
* சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் இறாலைப் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி தனியாக ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், குடைமிளகா சேர்த்து நன்கு வதக்கி, பின் சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து, அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து நன்கு கிளறி, ஒரு மூடியால் மூடி குறைவான தீயில் இறாலை வேக வைக்க வேண்டும்.
* இரண்டு நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, இறாலைக் கிளறி விட்டு, மீண்டும் 2 நிமிடம் இறாலை வேக வைக்க வேண்டும்.
* இறால் நன்கு வெந்ததும், அதன் மேல் கறிவேப்பிலையைத் தூவி இறக்கினால், சுவையான சில்லி இறால் தயார்.
Image Courtesy: simpleindianrecipes
இந்த பதிவின் மூலமாக சில்லி இறால் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சில்லி இறால் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .