2.0 படத்தில், பறவைகளின் மீது பேரன்பு கொண்டவராகவும், அவற்றுக்காக தன்னையே இழக்கத் துணிபவராகவும் வருவாரே… பக்ஷி ராஜன்? அக்ஷய் குமார் நடித்த அந்தக் கதாபாத்திரன் இன்ஸ்பிரேஷனே சலீம் அலிதான் ( Salim Ali ).
1876 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் நாள் அன்றைய பம்பாய் மாநிலத்தில் கேத்வாடி (Khethwadi) என்ற ஊரில் சலீம் அலி பிறந்தார். ஒரு வயது இருக்கும்போது தந்தையும், மூன்று வயதாக இருக்கும்போது தாயும் மறைந்தார்கள். மாமாவான அம்ருதின்தான் அனைவரையும் பார்த்துக்கொண்டார். காரணம் மாமாவுக்கு குழந்தைகள் யாரும் இல்லை. சலீம் உட்பட ஒன்பது சகோதர, சகோதரிகளை தன் சொந்தக் குழந்தைகளைப்போல வளர்த்து வந்தார். மாமா வேட்டையாடும் தொழில்புரிபவராக இருந்தார். அப்போது அடிக்கடி நவாப்களுக்காகவும், ராஜாக்களுக்காகவும் அவர் அடர்ந்த காடுகளில் வேட்டையாடினார். மூத்த சகோதரனான ஹமித் வேலைபார்த்த காட்டுப்பகுதிக்கு சலீம் அவ்வப்போது சென்று வந்தார். இயற்கை ஆராய்ச்சிக்கும், பறவை ஆராய்ச்சிக்கும் இந்தப் பயணம்தான் மையம் என்றாலும் சலீமை பறவை உலகின் பக்கம் முழுமையாகத் திருப்பிவிட்டதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று, வீட்டில் சமையல்காரனாக இருந்த நாணு. அவர் பழைய சாமான்களை வைத்து ஒரு கிளிக்கூடு கட்டித்தந்தார். அதில் சலீம் பறவைகளை வளர்த்துவந்தார். இப்படித்தான் சலீம் அலி பறவைகளைப் பற்றி ஆராய்ச்சியில் வீட்டில் முதல் பாடம் படிக்கத்தொடங்கினார்.
இரண்டாவது காரணம், துப்பாக்கி சுடுவதில் திறமைசாலியான சலீம் குருவிகளை எப்போது பார்த்தாலும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாக்கி வந்தார். அதில் ஒரு குருவி சுட்டவுடன் நேராக வந்து அவர் கால்களைத் தொட்டு உயிருக்காகக் கெஞ்சுவதுபோல இருந்தது. அது அவருக்கு மிகவும் வித்தியாசமானதாகப் பட்டது. அது என்னவென்று சலீம் கேட்க, மாமாவுக்குத் தெரியவில்லை. அதனால் சலீமை பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்துக்கு அழைத்துச்சென்றார். அங்கு கண்ட காட்சிகள் அவரை அசரவைத்தன. ஒன்றிரண்டு இல்லை. ஆயிரக்கணக்கிளான பறவைகளை உயிரற்ற வடிவத்தில் சிறுவன் சலீம் பார்த்தார். ஆச்சர்யப்பட்டார். சங்கத்தின் பொறுப்பில் இருந்த பெர்லார்ட் துரை அங்கிருந்த எல்லா பறவைகளையும் சலீமுக்கு சுற்றிக்காட்டினார். இங்கிருந்துதான் சலீமுக்கு பறவையைப் பற்றிய ஆர்வம் அதிகரித்தது என்று கூறலாம். மனிதனுக்கு சொந்தப்பெயரும், குடும்பப்பெயரும் இருப்பதுபோல ஒவ்வொரு பறவைக்கும், விலங்குக்கும் இரண்டு பெயர் இருக்கிறது. இந்தியாவில் நாட்டுக்காகம் என்றும், காட்டுக்காகம் என்றும் வேறுபட்ட இனங்கள் இருப்பதை பெர்லார்ட், சலீமுக்கு சொல்லிக்கொடுத்தார். பெர்லார்டை ஒரு தோழராக பார்த்த சலீம் அலி, தானும் ஒரு பறவை ஆராய்ச்சியாளனாக ஆக வேண்டும் என்று லட்சியத்தை மனதுக்குள் விதைத்துக்கொண்டார்.
1914-ல் சலீம் பர்மாவுக்குப் போனார். சகோதரர் அக்தரும், அவருடைய குடும்பமும் ரங்கூனில் வசித்து வந்தார்கள். பர்மா வாசம் சந்தோஷமாக இருந்தபோதிலும் பறவை ஆராய்ச்சி அத்தனை திருப்தியாக சலீமுக்கு இருக்கவில்லை. புத்தகங்களோ, பைனாக்குலரோ இல்லாமல் பறவைகளைப் பார்த்தார். பார்வை குறைவுள்ள ஒருவர் கண்ணாடி அணியாமல் எழுத்துகளைப் பார்ப்பதுபோல் இருந்தது அது. பிற பறவை ஆராய்ச்சியாளர்களுடைய தொடர்பும் Bombay Natural History societyயுடன் இருந்த தொடர்பும்தான் சலீம் அலிக்கு உற்ற துணையாக இருந்தது. பர்மா செல்வதற்கு முன்பு 1913-ல் வகுப்புகளுக்குச் சரிவர செல்லமுடியாமல் போனாலும், பாம்பே பல்கலைக்கழகம் நடத்திய மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் ஒரு மாதிரியாகத் தேறினார்.1917-ல் மாமா இறந்ததனால் சலீம் பம்பாய்க்குத் திரும்பினார்.
தாதர் கல்லூரியில் அவர் வணிகவியல் படிக்கத் தொடங்கினார். அதே சமயத்தில் செயின்ட் சேவியர் கல்லூரியில் அவர் விலங்கியல் பிரிவிலும் சேர்ந்தார். தாதர் கல்லூரியின் வணிகவியல் பாடங்கள் சலீமை நெருக்கிக் கொண்டிருந்தாலும், சலீம் விலங்கியல் படிப்பதற்காக சேவியர் கல்லூரிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அப்போது, காலையில் தாதர் கல்லூரியில் வணிகவியலும், மதியத்தில் சேவியர் கல்லூரியில் விலங்கியலும் படித்துக் கொண்டிருந்தார். அங்கு விலங்கியல்துறையின் தலைவராக இருந்த பிளாட்டர், பறவைகள் பற்றிய எல்லா நிபுணத்துவத்தையும் சலீமுக்கு கார்பன் காப்பி எடுப்பதைப் போல பாடத்தை விளக்கினார். பறவைகளின் குடும்ப விவரங்கள், உடல் அமைப்புகள், வாழ்க்கை முறைகள், வெளித்தோற்றங்கள், சிறப்பியல்புகள் என்று எல்லாவற்றையும் கற்கத்தொடங்கிய சலீம், ஒரு முழு பறவையாளராக மாறத்தொடங்கினார்.
சலீம் அலியின் 18-ஆவது வயதில், 1918 திசம்பரில் சலீம் அலிக்கும் தெஃமினாவுக்கும் திருமணம் நடைபெற்றது. சலீம் அலியின் வணிகம் காரணமாக இவர்கள் இருவரும் சிறிது காலம் பர்மாவில் வாழ்ந்தனர். திருமணமாகி குடும்ப வாழ்க்கையை மேற்கொண்ட சலீம் அலி வேலையின்றி வாடினார். ஆனால் அவரது மனைவி தெஹ்மினா பணியில் இருந்தமையால் வறுமைத் துன்பம் பெருமளவுக்கு அவரைத் தாக்கவில்லை. வேலையின்றி இருந்த நாட்களில் சலீம் அலி தனது வீட்டுத்தோட்டத்திலிருந்த மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு பறவைகளை நோட்டம் விடுவது வழக்கம்; அங்கிருந்த தூக்கணாங்குருவியின் வாழ்க்கை முறையைக் கூர்ந்து கவனித்து, அதைப்பற்றிய எல்லா விவரங்களையும் குறித்துக்கொண்டார். 1930 ஆம் ஆண்டு தான் திரட்டிய குறிப்புகளைக்கொண்டு, தூக்கணாங்குருவியின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் ஆகியவை பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இது முனைவர் பட்டத்திற்கான ஓர் ஆய்வேடு போல விளங்கியது. இக்கட்டுரை, பறவையியலில் சலீம் அலிக்குப் பெரும்புகழையும், பெயரையும் ஈட்டித்தந்தது.
சலீம் அலி பறவைகளைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ள இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றார். பறவைகளைப் பற்றியும் அவற்றின் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்து, ஆய்வு செய்து பின்னரே தகுதியான முடிவுக்கு வருவது சலீம் அலியின் வழக்கம். இத்தகைய சிறந்த ஆய்வு முறைகளை மேற்கொண்டு சலீம் அலி தனது புகழ் பெற்ற “இந்தியப் பறவைகளைப் பற்றிய கைநூல் (The HandBook on Indian Birds)” என்பதனை இயற்றி வெளியிட்டார். இந்தியப் பறவைகளைப் பற்றி தெரிந்துகொள்ள மிகவும் இன்றியமையாத நூல் இது. இந்நூல் மொத்தம் 13 முறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
சலீம் அலியின் உலகமே இந்திய நாட்டுப் பறவைகளோடு பின்னிப் பிணைந்ததாக விளங்கியது. இந்நிலையில் அவர் உலகப்புகழ் வாய்ந்த பறவையியல் அறிஞரான எஸ்.தில்லான் ரிப்ளே (S.Dillon Ripley) என்பவருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். அப்போது இந்தியத் துணைக்கண்டத்துப் பறவைகளைப்பற்றி 10 தொகுதிகளைக்கொண்ட தொகுப்பு நூல் ஒன்றைப் படிக்க நேர்ந்தது. இத்தொகுப்பில் பறவைகளைப் பற்றிய பல்வேறு விவரங்களும், அதாவது அவற்றின் தோற்றம், உணவுப் பழக்கவழக்கம், இனப்பெருக்க முறை, வலசை போதல் போன்ற பல்வேறு செய்திகளும் அடங்கியிருந்தன. பறவைகளைப் பற்றி அறிந்துகொள்வதை தனது பொழுதுபோக்காக மட்டுமன்றி, வாழ்க்கைப் பணியாகவே சலீம் அலி மேற்கொண்டிருந்தார். மக்கள் அவரை, “பறவைகளைப் பற்றிய நடமாடும் கலைக்களஞ்சியம்” என்றே அழைத்தனர். ஏறக்குறைய 65 ஆண்டுகள் இடைவிடாது பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்து, தான் விருப்பத்தோடு ஏற்றுக்கொண்ட பணியில் பெரும் சாதனைகளைப் புரிந்த சலீம் அலிக்கு அப்பட்டம் மிகவும் பொருத்தமே.
சலீம் அலி 1987 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 20 ஆம் நாள் முன்னிற்குஞ்சுரப்பி (prostate)புற்றுநோயால் இயற்கை எய்தினார்.
சலீம் அலி எழுதிய “இந்திய, பாகிஸ்தான் நாட்டுப் பறவைகளின் கையேடு (Handbook of the Birds of India and Pakistan) மற்றும் தன்வரலாற்று நூலான ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The Fall of Sparrow) ஆகிய நூல்கள் சலீம் அலியின் முக்கிய நூல்களாகும்.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…