வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை
Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகளில் உள்ள தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பது ஆகும். மேலும், அட்மா திட்டத்தின் வாயிலாக இதர துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம். அட்மா திட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, மீன் வளர்ப்புத்துறை, வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகிய துறைகள் ஒன்றிணைந்து அவ்வப்போது விவசாயிகளுக்கு பயிற்சி, கண்டுனர்தல் சுற்றுலா, செயல்விளக்கங்கள், பண்ணைப்பள்ளி மற்றும் வெளிமாநில சுற்றுலாக்களின் மூலம் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் கற்றுதரப்படுகிறது. இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அட்மா திட்டத்தில் பண்ணை பள்ளி தொடக்கம்
வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தில் ஒருங்கிணைந்த முறையில் நெல் சாகுபடி மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களை ஊக்குவித்தல் குறித்த ஆறு நாட்கள் நடைபெறவிருக்கும் பண்ணை பள்ளி முதல் வகுப்பு அண்டமி கிராமத்தில் இன்று தொடங்கியது. இப்பண்ணை பள்ளியில் தொடக்கத்தில் விவசாயிகளுக்கு முன் மதிப்பீட்டு தேர்வு நடத்தப்பட்டது.
வேளாண்மை துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையம் சாக்கோட்டை திருமதி. பாலசரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு உயிரி உரங்கள் பயன்பாடு, பசுந்தால் உர பயிர் சாகுபடி, தொழு உரம் இடுதல் போன்ற நஞ்சில்லா சாகுபடியினை மேற்கொண்டு மண்வளம் மேம்படுத்திட கேட்டுக் கொண்டார். வேளாண்மை உதவி இயக்குனர் மதுக்கூர் திருமதி .எஸ். திலகவதி அவர்கள் தற்சமயம் உள்ள அரசு மானியத் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் தெரிவித்தார்.
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் பட்டுக்கோட்டை பயிர் இனப்பெருக்க துறை இணை பேராசிரியர் முனைவர் .சித்ரா அவர்கள் நெல் ரகங்கள் தேர்வு செய்தல், விதை நேர்த்தி, உயிர் உர பயன்பாடு மற்றும் பூஞ்சான கொல்லிகள் பயன்பாடு குறித்து மற்றும் இதை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கமான முறையில் எடுத்துரைத்தார் . மேலும் விவசாயிகளை நெல் வயலுக்கு அழைத்துச் சென்று பூச்சி மற்றும் நோய் குறித்து விவசாயிகளுக்கு நேரடியாக காண்பித்து விளக்கம் அளிக்கப்பட்டது மற்றும் பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இப்ப பண்ணை பள்ளியின் நிறைவாக வேளாண்மை உதவி அலுவலர் திரு. பூமிநாதன் அவர்கள் விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தார். பயிற்சிக்கான ஏற்பாட்டினை வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமதி. சி .சுகிதா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் திரு. அய்யாமணி மற்றும் திரு. ராஜு ஆகியோர் செய்து இருந்தனர். வேளாண்மை திரு .இளங்கோ மற்றும் வேளாண்மை உதவி அலுவலர் திரு. முருகேஷ் ஆகியோர் பண்ணை பள்ளியில் கலந்து கொண்டனர்.