பட்டுக்கோட்டை நகராட்சி 18-வது வார்டு குரும்பக்குளம் பள்ளி அருகில் ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வாட்டர் ஏ.டி.எம்.மை அமைச்சர்கள் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
குடிநீர் பஞ்சம்
தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சியில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களின் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க தமிழக அரசு சார்பில் போர்க்கால அடிப்படை எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆறு, ஏரி, குளங்கள் அனைத்தும் வறண்டு விட்டதால் குடிநீரை தேடி பல கிலோ மீட்டர் தூரம் பெண்கள் குடங்களுடன் அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் கிராமப்புற பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் இதற்கு முன்பு நிமிடத்துக்கு 29 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. அது தற்போது 19 ஆயிரம் லிட்டராக குறைந்து விட்டது. இதனால் பல கிராமங்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் கிடைப்பதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பருவமழை இல்லாததாலும், மேட்டூரில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததாலும் டெல்டா விவசாயிகளும் குறுவை சாகுபடியில் சிரமப்பட்டு வருகின்றனர். பம்புசெட் பாசனத்தை மட்டுமே நம்பியுள்ளனர்.
வாட்டர் ஏ.டி.எம் Water ATM
தற்போது குடிநீர் பிரச்சனைக்கு பொதுமக்கள் வாட்டர் கேனை வாங்கி வருகின்றனர். அதாவது 20 லிட்டர் தண்ணீர் ரூ.35-க்கு விலை கொடுத்து வாங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் தண்ணீரை தேடி ஆங்காங்கே காலிக்குடங்களுடன் அலையும் பொதுமக்களுக்கு வசதியாகவும், தனியாரிடம் அதிக விலைக்கு வாட்டர் கேனை வாங்கி சிரமப்பட்டு வருவதை தவிர்க்கும் வகையிலும் புதிதாக ‘வாட்டர் ஏ.டி.எம்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வாட்டர் ஏ.டி.எம். திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பொதுக்கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு நீரை ஆதாரமாக கொண்டு பொது மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ( வாட்டர் ஏ.டி.எம்.) திறக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை நகராட்சி 18-வது வார்டு குரும்பக்குளம் பள்ளி அருகில் ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வாட்டர் ஏ.டி.எம்.மை அமைச்சர்கள் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த திட்டத்தின் படி பொதுமக்களுக்கு 20 லிட்டர் தண்ணீர் ரூ.-7-க்கும், ஒரு லிட்டர் தண்ணீர் 1 ரூபாய்க்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் 10 லிட்டர் தண்ணீர் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் சுமார் 2 ஆயிரம் பேர் பயன் அடைவர்.
மேலும் இந்த திட்டம் பட்டுக்கோட்டை நகரில் 23 இடங்களில் மொத்தம் ரூ.3.45 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டம் பற்றி அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
வாட்டர் ஏ.டி.எம். திட்டம் நல்ல திட்டம் தான். குறிப்பாக அதிக விலை கொடுத்து தனியார் வாட்டர் கேன் வாங்க வேண்டியுள்ளது. தற்போது குறைந்த விலையில் 20 லிட்டர் தண்ணீர் ரூ.7-க்கு கிடைக்கிறது.
வருங்காலங்களில் வாட்டர் ஏ.டி.எம். தான் பல இடங்களில் செயல்படும் என்று நிலை வந்துவிடும். நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க வேண்டும். மரங்களை வளர்க்க வேண்டும், ஆறு, குளங்களை தூர்வாரி நீர் மேலாண்மையை சரிவர கடைபிடித்தாலே குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. இதை அரசு, பொதுமக்களுடன் இணைந்து நீராதாரத்தை பெருக்க பயனுள்ள நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி: மாலை மலர்