(படங்கள் : முதல்வர் பினரயி விஜயன், தேவசம் வாரியத் தலைவர் பிரேயர் கோபால கிருஷ்ணன்)
தற்போது கேரளா முதல்வர் பினராய் விஜயன் ஆட்சிக்காலத்தில், திரு தேவசம் வாரியத் தலைவர் பிரேயர் கோபால கிருஷ்ணன்ம், கேரளா திருவாங்கூர் தேவசம் வாரியத்தில் கீழ் உள்ள கோவில்களில் 6 தலித்துகள் உள்பட 36 பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்டோரை கோவில் அர்ச்சகர்களாக நியமித்துள்ளது ஏன் பாராட்டுதலுக்கு உரியது?
திருவாங்கூர் சமஸ்தானம்
“1700 ஆண்டுகளில் திருவாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்கள் மனு தர்ம விதிப்படி ஆட்சி புரிந்தார்கள். அப்போது கன்னியாகுமரி திருவாங்கூர் அரசுக்குட்பட்ட பகுதியாக இருந்தது. மனுதர்ம விதி என்றால் சாதிக்கொடுமைகளின் உச்சவிதி என்று பொருள். மக்களை 18 வகைச் சாதியாகப் பிரித்தார்கள். இதில் சாணார் என்ற நாடார் இனத்தவர்கள் கடைசியாக 18 வது சாதியாகப் பட்டியலிடப்பட்டார்கள். பறையரைத் தொட்டால் தீட்டு, சாணாரைப் பார்த்தாலே தீட்டு என தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டனர் பிராமணர்கள் அல்லாத பிற சாதியினத்தவர்கள்.
அம்மக்கள் கோவில் தெருக்களில் செல்வதற்கும், உயர்சாதியினரின் தெருக்களில் செல்லவும், குளம், கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், குளிக்கவும், காற்றோட்டமுள்ள வீடுகளில் வசிக்கவும் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. திருமணங்களில் தாலி கட்டுவதற்குக் கூட வரி விதிக்கப்பட்டது. பசுக்கள், மண்வெட்டிகள், அரிவாள்களுக்கும் கூட வரி விதிக்கப்பட்டது. பனைத் தொழில் செய்பவர்கள் பனை மரத்திற்கும் கூட வரி செலுத்த வேண்டும் என்ற பெயரில் கொத்தடிமைகளாகக் கூலியின்றி வேலை செய்ய வேண்டும்.
விவேகானந்தர்
சாணார் (நாடார்) மக்கள் தீண்டத்தகாதவர்களென்றும் தள்ளி வைக்கப்பட்டனர். பெண்கள் மேலாடை அணிவதற்கும், தெய்வத்தை வழிபடுவதற்கும் கூடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூட “திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவும் சாதியக் கொடுமைகளைப் போன்று உலகில் வேறெங்கும் கண்டதில்லை” என எழுதியுள்ளனர். இக்கொடுமைகளைக் கண்டதனால்தான் விவேகானந்தர் குமரிக்கு வந்த பொழுது, “திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம்” எனக் குறிப்பிட்டார்.
பெண்களின் மார்புக்கு வரி
1754-ல் திருவாங்கூர் சமஸ்தானத்தின் இராணுவச் செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ‘தலைஇறை’ எனும் வரி விதிக்கப்பட்டது. இத்தலைஇறையைக் கட்ட முடியாமல் பலரும் வாழ வழி தேடி திருநெல்வேலிக்குத் தப்பியோடினர். 1807-ல் மட்டும் ஈழவர், நாடார், சாம்பவர் சாதி மக்களிடம் ‘தலைஇறை’யாக வசூலிக்கப்பட்ட தொகை 88,000 ரூபாய். இவ்வரி வசூலிப்பு, ஆடவரின் மீசைக்கு வரி, வளைந்த கைப்பிடியுள்ள குடைக்கு வரி, பெண்களின் மார்புக்கு வரி எனப் பல்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
பெண்களின் மார்புகளின் அளவுக்கேற்ப வரி வசூல் செய்யப்பட்டன. பொது இடங்களில் மட்டுமல்லாமல் எப்போதுமே அவர்கள் மார்பை மறைக்கக்கூடாது எனக் கட்டளை இடப்பட்டது. மீறினால் கடும் தண்டனை விதிக்கப்பட்டது. மாடத்தி என்ற பெண்மணி மேலாடை அணிந்ததற்காக அவரை மாட்டுக்குப்பதிலாக ஏரில் பூட்டி அடித்து ஓட்டிக் கொன்றார்கள். அப்போது மாடத்தி கர்ப்பிணி.
1937 வரையிலும் கூட ஒடுக்கப்பட்ட சாதியினர் “தமது வீட்டுக் கதவுகளை” குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் வைக்கக்கூடாது; அவர்கள் வீட்டில் செம்புப் பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது; வீடுகளில் பசுமாடுகள் வளர்க்கக் கூடாது; நிலம் வைத்திருக்கக் கூடாது” போன்ற கடுமையான விதிகள் அமலாக்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட சாதியினர் செல்லப் பெயர்களைச் சூட்டிக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டனர்; ‘சோறு’ என்பதற்குப் பதிலாக ‘கஞ்சி’ என்றே சொல்ல வேண்டுமென்றும், தமது வீடுகளை ‘குடிசை’ என்றே அழைக்க வேண்டுமென்றும் இழிவுபடுத்தப்பட்டனர்.
குழந்தைகளின் பலிபீடத்தின்மீது கட்டப்பட்ட அரண்மனை
1746-ல் மார்த்தாண்ட வர்மா எனும் திருவனந்தபுரத்து மன்னன் தனது அரண்மனையைக் கட்டும் பொழுது, அரண்மனையின் பலத்துக்காக வேணி ஈழவர், நாடார், முக்குலர் சாதிகளைச் சேர்ந்த 15 குழந்தைகளைப் பலி கொடுத்தான். திருவனந்தபுரத்தின் அரண்மனை 15 குழந்தைகளின் பலிபீடத்தின்மீது கட்டப்பட்ட சரித்திரக் கருப்புப்புள்ளி.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்
அதே திருவாங்கூர் பெயரைத் தாங்கியுள்ள திருவாங்கூர் தேவசம் வாரியம்தான் தற்போது, திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 1,248 கோயில்கள் உள்ளன. அவற்றில் காலியாக உள்ள 62 அர்ச்சகர் பணியிடங்களை நிரப்புவதற்காக அண்மையில் எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டன. அவற்றை மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. அந்த அடிப்படையில் தகுதியானவர்களை பரிந்துரைக்கும் பொறுப்பு தேவஸ்வம் வாரியத்துக்கு உண்டு.
அதன்படி, 62 அர்ச்சகர்களை நியமித்து ஆணை வழங்கியுள்ளது. அதில் 26 பேர் பிராமணர்கள், மீதமுள்ள 36 பேர் பிராமணரல்லாத சாதிகளைச் சேர்ந்தவர்கள், அதில் தலித்துகள் 6 பேரும் அப்பொறுப்புகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தலித்துகளை அர்ச்சகர்களாகப் பரிந்துரைப்பது இதுவே முதன்முறை என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தலித்துகள் உள்பட பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்டோர் கோவில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டது ஏன் பாராட்டுதலுக்குரியது என்பது இப்போது புரியக்கூடும்.